Monday 29 October 2012

வங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - "கடன் வாங்கலியோ, கடன்..!''

வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சட்ட திட்டங்கள் மட்டுமல்லாமல், காலம் காலமாக மதிக்கப்படும் மரபுகளும் உள்ளன. இதனை BANKING LAW AND PRACTICE என்பார்கள். ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தேவையான வரைமுறைகளை வகுத்துக் கொடுப்பதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடன் வசூப்புக்கு குண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு வங்கிகள் மீது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த அவலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனியார் வங்கிகளில் தொடங்கியது.



ஆனால், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த வசூல் கலாசாரம் தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தவறினால், வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு "தனியாள்கள்" நியமிக்கும் போக்கு வங்கிகளுக்கு அழகல்ல. இந்தக் கடன் வசூலிப்பு ஏஜெண்ட்களின் அராஜகத்தால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. எப்படியாவது கடனை வசூலித்துக் கொடுக்க வேண்டியது இந்த ஏஜெண்ட்களின் வேலை. இவர்களால் ஏற்படும் துன்பத்தையும், அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பலர்.

பல தனியார் வங்கிகளுக்கு எதிராக, பல் வேறு மாநில நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் நிலைமை மாறவில்லை. கவலைக்குரிய இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கடந்த காலங்களில், வங்கிக்கடன் வழங்குவதற்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன. பெரும்பாலும் தேவை அடிப்படையிலும் ஏதேனும் ஒருவகை செக்யூரிட்டியின்' பேரிலும்தான் வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கி வந்தன. கடன் கோருபவர்களுக்கு, அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் மற்றும் வருமானம் உள்ளதா ? என்பதைப் பரிசீலித்த பின்னரே வங்கிகளில் கடன் தருவார்கள்.

ஆனல் 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அதே காலகட்டத்தில் தோன்றிய, அதீத நுகர்வோர் கலாசாரத்தின் விளைவாக, வங்கிகள் அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக உருவான நுகர்வோர் கலாசாரத்தை லாபம் ஈட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக வங்கிகள் கருதின. இதன் பயனாக, வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்பொருள் வாங்குவதற்காக கடன் மற்றும் கடன் அட்டைகள் என விதவிதமான கடன்களை வங்கிகள் தாராளமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கின.

முன்பு, கடன் விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிப்பதை கடமையாகக் கருதிய வங்கிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. மாறாக, "கடன் வாங்கலியோ, கடன்!'' என்று கூவிக் கூவிக் கடன் கொடுக்கத் தொடங்கின. தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்தன. இந்நிலையில், வங்கிகளுக்குத் தேவையெல்லாம் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் மட்டுமே! காரணம், மேலே குறிப்பிட்ட வசூல் முறையை நம்பித் தான் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக இந்தத் தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றன.

இப்படி, லாப நோக்கினால் உந்தப்பட்ட வங்கிகள், கடன் வழங்குவதில் காட்டிய அதீத ஆர்வம், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட அலட்சியப்போக்கு ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், கடன் தொகையை வசூலிப்பதற்கு வெளியாட்களை நியமித்தன. தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியை, வங்கிக்குத் தொடர்பில்லாத ஆட்களை அல்லது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தன. அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை. நீதிமன்றங்களை அணுகினால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதைக் காரணம் காட்டி, வங்கிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அனுமதிக்காது.

நல்லவேளையாக, இதுவரை அமைதி காத்து வந்த பாரத ரிசர்வ் வங்கி, இப்போது தன் மவுனத்தைக் கலைத்துள்ளது. "நிதி மற்றும் கடன்கொள்கை''யை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி, "வங்கிகள் தங்கள் கடன்தொகையை வசூலிப்பதற்கு, ஏஜெண்ட்களை நியமித்து, வன்முறையைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார். காலம் கடந்து வந்திருந்தாலும், இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கக்கூடியது. இது தொடர்பான விரிவான வழிமுறைகள் அடங்கிய வரைவு சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான தொடர் நடவடிக் கையை தாமதமின்றி மேற்கொண்டு, வங்கிகளின் இத்தகாத செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றம் ஒரு யோச னையைத் தெரிவித்துள்ளது. வசூல் ஏஜெண்ட்களின் அராஜகம் மற்றும் அத்துமீறிய செயல்களுக்கு அவர்களை நியமித்த வங்கிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அது. உச்ச நீதிமன்றத்தின் யோசனை செயல்படுத்தப்படுமேயானால், வங்கிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கையை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் தொகையை வசூல் செய்வதற்காக, 3,000 மார்க்கெட்டிங் மற்றும் சிறப்பு வசூல் அதிகாரிகளை வங்கி அலுவலர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மென்மையான முறையில் கடன்தொகையை வசூலிக்க முற்படுவார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இதர வங்கிகளும் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில், மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன் தொகையைத் தவணை முறையில், அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி அமைப்புகள், வட்டிவீதத்தையும் கடனுக்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் தங்கள் போக்கில் மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் வெளிப்படையான நடைமுறை இல்லாததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதுதவிர, வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே கடன் தொகையை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதற்கென ஒரு தனிக்கட்டணத்தை வங்கிகள் வசூக்கின்றன. ஆக, தவணையை கட்ட தாமதம் ஏற்பட்டாலும் தண்டனை; முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தினாலும் தண்டனையா? இப்படி கூடுதல் கட்டணம் வசூப்பது நியாயமாகாது. இது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதுவும் விரைந்து அமல் படுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான வங்கிச் சேவை அளிக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டிய வங்கிகள், வணிக ரீதியிலும் செயல்படுவது புரிந்து கொள்ளக் கூடியதே.. ஆனால், தனியார் லேவாதேவிக்காரர்களைப்போல் வங்கிகள் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.


- எஸ். கோபாலகிருஷ்ணன்




(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்)

Sunday 26 August 2012

கைது செய்யப்படும் நபர்களுக்கு உரிமைகள் உண்டா..?

தவிர்க்க இயலாத சம்பவங்களில் ஒரு நபரை கைது செய்ய நேரிட்டாலும், அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கருத்தளவில் தெளிவாகவே இருக்கிறது. இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் நீதிபதி திலிப் குமார் பாசு Vs. (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது. 

 
இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.    கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.  கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.  கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.   கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.     கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.  
மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

( (1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

    (2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

 (4) கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. 

Saturday 11 August 2012

முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !

முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. "ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்". 



காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 

பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள்
(Bail able)மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள்
(Non - Bail able)ஆகும். 

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும். 

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. 

அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 


அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். 
எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும். 
முதல் தகவல் அறிக்கை :

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும். 

முதல் தகவல் அறிக்கை மாதிரி

முதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :
 
குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். 

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். 

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். 

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். 

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

Monday 30 July 2012

காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி? - ஒரு விரிவான அலசல் !

குற்ற விசாரணையின் முதல் படியாக கருதப்படும், பாதிக்கப்பட்டவரால் அளிக்கப்படும் புகார் மனு நீதி மன்ற விசாரணையின் போது மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப் புள்ளியாகும். சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல் துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் கொலை போன்ற கொடுங் குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. 



எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம். காவல் துறையில் அளிக்கப்படும் புகார் மனு சாதாரண வெள்ளைத் தாளில் கையால் தெளிவாக எழுதப்பட்டு இருந்தாலே போதுமானது. புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 

புகார் மனுவில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் :

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல் நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம்.)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும். 

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் 'அடையாளம் தெரியாத நபர்' என்று சொல்லலாம். தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம். 

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும். 

இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்த முறையை ஏற்றுக் கொள்கிறது.

Saturday 14 July 2012

கீழை இளையவனின் 'பேசும் சட்டம்' - புதிய வலை தளம் துவக்கம் !

சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஓர் ஒளிவிளக்கு" என்பது அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்டிலிருந்தும் எவர் ஒருவரும் தப்பிக்கவும் முடியாது, தண்டனை பெற்று விடவும் கூடாது.. எனவே நம் இந்திய திரு நாட்டின்  குடிமக்கள் அனைவரும் ஓரளவாவது சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.  



 
சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் "கிரிமினல் சட்டம்" என்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், 'சிவில் சட்டம்' என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால் குற்றவியல் சட்டப் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருப்பது இல்லை.

ஒரு குற்ற நிகழ்வில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பாதிக்கப்படலாம். அல்லது அதனை சார்ந்து நிற்பவராக இருக்கலாம். அப்போது நமக்கு ஓரளவுக்கு கூட, சட்ட நடைமுறைகள் தெரியாமல் இருக்கும் போது, அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டை பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாமலே போகிறது.

அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் உள்ளன. பிரச்சனைகள் வந்து நம் வீட்டுக் கதவை தட்டிய பின்னர் அதற்கான தீர்வை தேடுவதை விட, பிரச்சனைகளை தவிர்த்து வாழ்வதே புத்திசாலித்தனமானது. அதையும் மீறி பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை எதிர் கொள்வதற்கான திறனை பெற வேண்டும்.

நம் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், விற்பனை சட்டங்கள், திருமண சட்டங்கள், காவல் நிலைய நடை முறைகள், நீதி மன்ற நடைமுறைகள், மனித உரிமை சட்டங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், நகராட்சி சட்டங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற  இன்றியமையாத பல சட்டங்கள் குறித்து ஒரு மேம்போக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது நோக்கம். எனவே இதில் சொல்லப்படும் வழிமுறைகள் அனைத்தும் பல சமயங்களிலும் சரியாக இருந்தாலும் கூட, தங்களுக்கு ஏற்படும் உண்மையான பிரச்சனைகளுக்கு அருகில் உள்ள வழக்கறிஞரின் உதவியை நாடுவதே முறையான அணுகுமுறையாக இருக்கும்.

"ஆயிரம் குற்றவாளிகள் கூட தப்பித்து விடலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட, தவறுதலாக தண்டனை பெற்று விடக் கூடாது." ஆகவே சட்டத்தின் சாராம்சங்களை புரிதலுடன், குறைந்தளவேனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கான நல்ல நோக்கத்தில் இந்த கீழை இளையவன் 'பேசும் சட்டம்' வலை தள பக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து வர இருக்கும் பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டு, நம் நண்பர்கள் அனைவருக்கும் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நல்ல தருணத்தில் இந்த வலை தள பக்கம் துவங்க ஊக்கம் அளித்த நண்பர்களுக்கும், பக்க பலமாய் ஆதரவு தரும் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் திரு.பாலமுருகன் M.L.,, திரு.பி.சுந்தரராஜன் L.L.M., திரு.மு.வெற்றிச் செல்வன் M.L., (மக்கள் சட்டம்) ஆகியோர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 

அன்புடன்
கீழை இளையவன் 'பேசும் சட்டம்' குழு.